அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்

0
40
ஜெனீவா,
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுத சோதனைகள் என தொடர்ந்து உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்காவுடனான உச்சி மாநாட்டுக்கு பிறகு தனது அணுகுமுறையை மாற்றியது.  கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தியது.
அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத  நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் இந்த செயல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை கைவிட வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
இதுதொடர்பாக பிரான்ஸ் நாடு கொண்டு வந்த இந்த வரைவு அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 70 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.  வடகொரியாவை ஆதரிக்கும் சீனாவும், ரஷியாவும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here