அரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்தால், நாடு சீர்குலைந்துவிடும்.

0
199

இன்று நாடு அடைந்திருக்கும் அமைதி சூழலையும் அரசியல் நிலைத்தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் நடப்பு அரசாங்கத்தை மாற்றும் தவற்றை செய்ய துணிந்தால் நாடு சீர்குலைந்துவிடுமென பிரதமர் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

அமைதி விவகாரத்தை நாம் சர்வசாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முன்பு கம்யூனிஸ்ட் மிரட்டலை நம் சந்திக்கும் போது நமக்கு சுதந்திரம் வேண்டுமென போராடியதால், சுதந்திரம் மற்றும் அமைதியின் மதிப்பை உணர்ந்தவர்களாக இருந்தோம்.

இப்போது நாடு அமைதியும் சுபிட்சமும் பெற்று திளைக்கும்போது, சில வேளைகளில் அதனை நாம் மறந்து விடுகிறோம். சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அவசியமில்லாமல் அரசாங்கத்தை மாற்ற எண்ணுகிறோம் என்று இங்கு சபா, டத்தாரான் பெக்கான் நவாவானில் நடந்த மாபெரும் மக்கள் பேரணியில் உரை நிகழ்த்தியபோது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.

பாரிசான் நெஷனல் ஆட்சி நிர்வாகத்தில் நாம் அடைந்திருக்கும் அரசியல் நிலைத்தன்மையையும் பல்வேறு பெருமைத்தக்க மேம்பாட்டு வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

அண்மையில் ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். மலேசியாவைவிட அந்நாடு முன்கூட்டியே  சுதந்திரம் பெற்றிருந்தது. ஏன் அந்நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படவில்லை. காரணம் அந்நாடு நீண்ட காலமாக உள்நாட்டு கலவரத்தில் சிக்கி தவிக்கிறது என்று மேற்கொள் காட்டி பேசினார் பிரதமர் நஜிப்.

பாரிசான் நெஷனல் தலைமையிலான அரசாங்கம் நாட்டை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் போல பாரிசான் நெஷனல் வெற்று  வாக்குறுதிகளை கூறுவதில்லை. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்டு வருகிறது.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமெனும் நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகள் கெட்டிக்காரத்தனமாக பொய்களை பரப்பிவருகின்றன.

எதிர்க்கட்சி இறுக்கமான சூழலில் இருப்பதால் அரசியலிலிருந்து ஓய்வுப்பெற்ற 93 வயதானவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. உலகத்தில் வேறெந்த நாட்டிலாவது இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here