நிர்வாக ஆசிரியர்
திசைகள் மின்னியல் வலைக்காட்சி ! நிர்வாக ஆசிரியர்முனைவர்’ பெரு. அ.தமிழ்மணியின் (வீராசாமி) வாழ்க்கை குறிப்புகள் :
இவர் 31/3/49 ல் மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் காஜாங் நகர் மருத்துவமனையில் , பெருமாள், அகிலாண்டம் தம்பதிகளுக்கு மூன்றாவதுமகனாகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தோர் அறுவர் எனினும் தற்போதுதம்பி ஒருவரும் தங்கை ஒருவருமே உள்ளனர். இவர் 1973 ஆம் ஆண்டில் கிளிமொழி என்பவரை, செந்தமிழ்ச்செல்வர் சீ.வீ.குப்புசாமி தலைமையில்சுயமரியாதை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மணிமலர், நேயமணி, மணிமொழி, கண்மணி என்று நான்கு பிள்ளைகள் உண்டு.
ஒரு கார் விபத்தின் மூலமாக ஆறுமாதகாலமாக முடமாகி, நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, தமது உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும் பல்வேறு வழிகளில் தமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள பெரும் முயற்சியை எடுத்துக்கொண்டார்.
தந்தை பெரியாரின் அதிதீவிர பின்பற்றாளரான தமிழவேள் கோ.சாரங்கப்பாணியால் ஈர்க்கப்பட்டு, சிங்கப்பூர் தமிழ்முரசு ஏட்டில் 1963 ஆண்டுவாக்கில் ஒரு அலுவலகப் பையனாகப் பணியில் அமர்ந்தார்.அதன்பின் படிபடியாக செய்தித்துறைக்கு மாறினார். கோசாவின் கொள்கைப்பிடிப்பும்,அவரின் அன்றாட நடவடிக்கைகளும் இவரை பகுத்தறிவாதியாக மாற்றியதோடு, அவரைப்போன்றே தமது 14 வயதில் வேட்டியை முழுநேர உடையாகவும் அணியத்துவங்கினார்.
இவர்,தமிழ்ஓசை ஏட்டின் துணையாசியராகவும் தினமுரசு,தினமலர்,தமிழ்க்குரல்,தமிழ்நேசன் ,புதியப்பார்வை போன்ற ஏடுகளில் நிர்வாக ஆசிரியராகவும், பணியாற்றியுள்ளார்.
மற்றும், புதிய சமுதாயம், தூதன், தராசு,ஜனநாயகம்,காதல்,முகவரி, போன்ற வார மாத ஏடுகளுக்கு உரிமையாளராகவும் ஆசியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நடத்திய தூதன் வார ஏடு, மலேசிய பத்திரிகை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. புலன்விசாரணை செய்திகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றைப்புரட்டிப் போட்டது. மலேசிய இந்தியர்கள் முதலீடு செய்த மைக்கா போன்ற பொருளாதார நிறுவனங்களில் பங்குப்பரிவர்த்தனையில் ஏற்பட்ட குழறுப்படிகளை அம்பலப்படுத்தியதோடு, அதுப்பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று எடுக்கப்பட்ட நீதிமன்றத்தடையுத்தரவையும் மீறி எழுதி அதற்காக 46 நாள்கள் சிறைவாசமும் அனுபவித்து; பின்னர்,உச்சநிதிமன்றத்தில் வாதாடி அவ்வழக்கிலிருந்து விடுதலைப்பெற்றார்.
இவர வெளியிட்ட புலன் விசாரணை செய்தியால் டேப்கல்லூரி, ஏம்ஸ் பல்கலைக்கழகம் போன்றவை பொதுமக்களின் உடமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. 1968 ஆம் ஆண்டு ,முதல்கட்டமாக இவரின் அரசியல் பிரவேசம் தொழிற்கட்சியில் துவங்கியது, 1969 ல் நாட்டில் ஏற்பட்ட கலவரத்துக்குப்பிறகுஅவரின் அந்த அரசியல் வேட்கை அடங்கியது. 1969 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா இறந்ததையொட்டி நடைபெற்ற இரங்கற்கூட்டத்திற்கு, நடத்தக்கூடாது என்று இருந்த தடையை மீறி இவர் நடத்தியதால்,கைது செய்யப்பட்டு 48 மணிநேரம் போலீசின் கடும் விசாரணைக்கும் கடும் தாக்குதலுக்கும் உள்ளானார்.
1976 ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் இந்து ஆலயங்களில் சிலை உடைப்புகள்நடந்து , அது தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டியே நடத்தப்படுகிறதுஎன்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய பேச்சுக்கு கடும்கண்டனத்தைத் தெரிவித்ததோடு,இந்த சிலை உடைப்பை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, உண்மையான குற்றவாதிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, தேசிய கோட்பாடன “ருக்குன் நெகரா”வை கொளுத்தும் முயற்சியில் இவரின் தலைமையிலான பத்துமலை மணிமன்றம்,ஈடுபட்டபோது, அதேநேரம் கோவில் சிலை உடைப்பு தொடர்ச்சியாக 33 வதாக ஆலயமான கெர்லிங்கில் அந்த சம்பவம் நடந்த போது அந்த சிலைஉடைப்பில் பங்கேற்ற குற்றவாளிகளில் ஐவர்,அந்த ஆலய வளாகத்தில் பாதுக்காப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்களால் தாக்கப்பட்டதில் அதில் நால்வர் படுகொலைக்கு ஆளானதையொட்டி, அந்தக்கொலையில் ஈடுப்பட்டவர்கள் எனது ஆதரவாளர்களாகயிருக்கக்கூடும் என்ற கண்ணோட்டதில் விசாரணைக்கு உள்நாட்டுப்பாதுக்காப்புச்சட்டத்தால் தடுத்துவைக்கப்பட்டு, மூன்றுநாள் கடும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டதும்,அதைத்தொடர்ந்து,ருக்குன் நெகரா கோட்பாட்டை எரிக்கத்திட்டமிட்டதாக காரணம் காட்டி ஐந்து ஆண்டுகள்வரை எந்தவகையான தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்கும் உள்ளாக்கப்பட்டார்
இவரின் அரசியல் எதிரிகளால் 1988 ஆம் ஆண்டுவாக்கில் எரிதிரவகம்(ஆசிட்) முகத்தில் ஊற்றப்பட்டு, அதன் மூலமாக ,முகச்சிதைவும் அதேவேளை இரு கண்களும் பார்வையை இழக்க நேரிட்டு,பின்னர் அறுவைச்சிகிச்சைக்குப்பிறகு ஓரளவு குணப்படுத்த முடிந்தது.
இந்தியர்கள் பங்குரிமைப்பெற்ற நிறுவனம் எதிர் நோக்கிய ஒரு ஊழல் குற்றச்சாட்டையொட்டி நாட்டின் புலன் விசாரணை இலாகா( ஏசிஏ நடத்திய விசாரணை முடிவை அறிவிப்பதில் காலந்தாழ்த்தியதைக் கண்டித்துநாடாளுமன்ற வளாகத்தில் ஒரு நாள் உண்ணாவிரத்தையும், அதைத்தொடர்ந்து பத்துமலை வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத்தையும் தொடர்ந்து நடத்தியதின் எதிரொலியாக சட்டத்துறைத்தலைவர் தமது விசாரணை முடிவை விரைந்து அறிவிப்பதாக அறிவித்ததோடு இவரின் ஐந்து நாள் கடும் உண்ணாவிரத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார். அந்நேரம், இவருக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததோடு, நாட்டின் துணைப்பிரதமரும் இவரின் நடவடிக்கையைப் பாராட்டினார்
நாட்டில் நடைபெற்ற ஊழல் குறித்தும் அதேவேளை இந்திய சமூகம் அந்த ஊழலால் பாதிக்கப்படுவதை எதிரொலிக்கும் வகையில்.நாடுமுழுவதும் இவர்நீதிகேட்டு நெடும் பயணத்தை மேற்கொண்ட போது, இவரின் ஐந்தாவது கூட்டம் பினாங்கில் நடைபெற்ற போது இவர் குண்டர்களால் தாக்கப்பட்டுஉடல் முழுவதும் ஏற்பட்ட காயங்களுக்கு 180 க்கும் மேற்பட்ட தையல்கள்போடப்பட்டு கடும் போராட்டங்களுக்குப்பின் உயிர் தப்பினார்.
இவர் மீது எத்தனயோ பொய்வழக்குகள் இவரின் அரசியல் வைரிகளால் தொடுக்கப்பட்டும் அந்த வழக்குகளிலிருந்து இவர் மீண்டு வந்துள்ளார்.இவர் எழுத்துகளால் கடும் விமர்சனங்களால் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் வெற்றிபெற்று, வழக்குத்தொடுத்தவர்கள்நீதிமன்ற விசாரணைக்குத்தாக்குப்பிடிக்க முடியாமல் பின்னர் இவரிடம் சமரசம் செய்து கொண்டு வழக்கை பின் வாங்கியும் கொண்டனர்.
இவர் இதுவரை எழுதிவெளியிட்ட நூல்கள், சரித்திரமே விழித்திடு, நெருப்பு முனையில் திருப்பு முனை, சமுதாயம் எங்கே போகிறது, ஒரு பேனாவின் கட்டளைகள் ஆகியவையாகும் ,பேனாவின் கட்டளை நூலுக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட தடையுத்தரவை அகற்றப்பட்டு அந்நூல் வெளியிட நேர்ந்ததாகும்.இன்னும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட வேண்டிய பட்டியலையும் இவர் வைத்துள்ளார்.
இவர் 2005ல், தமிழ்மறை மாநாட்டை அனைத்துலகளவில் நடத்தி, “தமிழ்மறை ஒன்றே தமிழரின் வாழ்வியல் நெறி” என்று உலகில் உரக்க முழங்கச்செய்தார். இம்மாநாட்டையொட்டி இவர் வெளியிட்டுள்ள ஆயிரம் பக்கங்கள் கொண்ட மாநாட்டு மலர் உலகரங்கில் பெரும் பாராட்டை பெற்றது. அதேவேளை அம்மாநாட்டையொட்டி பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் திருவள்ளுவர் சிலையையும் நிறுவியவராவார்.
2012 இவர் நடத்திய அனைத்துலக பகுத்தறிவு மாநாட்டின் வழி, “ பகுத்தறிவு ஒன்றே மனுகுலத்தின் நீதி” என்ற கருப்பொருளைப் பரவச்செய்தார், இம்மாநாட்டையொட்டி,500 க்கும் மேற்பட்ட பக்கங்களில், பகுத்தறிவுக்களஞ்சியத்தையும் வெளியிட்டார். அதேவேளை அம்மாநாட்டையொட்டி பினாங்கு கப்பள பத்தாசில் பெரியார் சிலையையும் நிறுவியவராவார்.2013 ஆம் ஆண்டில் இவரைத்தலைவராக்கொண்ட மலேசியத்தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், “ மலேசிய தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டு” எனும் தலைப்பினான கருத்தரங்கத்தை நடத்தியதோடு நூலையும் வெளியிட்டார். அந்த நூலில் நாவல், சிறுகதை, நாடகம்,கவிதை, புதுக்கவிதை போன்றவற்றின் துவக்ககால வரலாற்றுப்பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று 2017 ல் அனைத்துலக அளவில்,’ தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாட்டை நடத்தி, அம்மாநாட்டையொட்டி 300 பக்கத்தில் உணர்வாளர் களஞ்சியத்தையும் வெளியிட்டார். இம்மாநாட்டையொட்டி “இனத்தால் திராவிடர், மொழியால் தமிழர், உலகத்தால் மனிதர்,” என்ற கருப்பொருளை முன் வைத்ததோடுமட்டுமல்லாமல் அனைத்துலகம் அடுத்து காணவேண்டியதும் பின்பற்றவேண்டியதும் திராவிட பார்வையும் பயணமாகும் என்ற வாதத்தை முன் வைத்ததோடு,
இனி திராவிடம் என்ற சொல்லின் அர்த்தமற்ற ஆதிக்கம் இந்தியாவைச்சுற்றியோ,அல்லது இந்திய தென் மாநிலங்களைச்சுற்றியோ நகர்த்தப்பட வேண்டிதல்ல, அது ஆப்பரிக்க கண்டத்திலிருந்து ஆராயப்பட வேண்டியதொன்று, அந்த எல்லையிலிருந்து தொடங்கும் போது 250 கோடிக்கும் மேற்பட்ட திராவிட பெருங்குடி மக்கள் உலகக் கணக்கெடுப்பில் அடையாளப்படுத்தப்படுவார்கள். 30 க்கும் மேற்பட்ட மொழிகள் வழி இந்த அடையாளம் காணப்படும் என்ற கருத்தை முன் வைத்ததோடு, இனி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என மொழிவழி மக்கள் மட்டுமே திராவிடயினம் என்ற வழக்கை முற்றாகப் புறக்கணிப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் அழுத்தமாக வைத்துள்ளார். குமரிகண்டம்,ஹராப்பா, மொகஞ்சாரோ, நாகரீகங்கள், சிந்துசமவெளிநாகரீகங்கள் பரவியதையும் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துபோன அந்த வரலாற்றுப் பதிவுகளுக்குப் புத்தம் புதிய பார்வையுண்டு என்ற கருத்திலும் அழுத்தம் பெற்றுள்ளார்.
அகழ்வாராட்சிகளின் அண்மைய முடிவுகளையும் கவனத்தில் கொண்டு சாதியற்ற மதமார்க்கமற்ற பண்பாட்டுப்பயணத்தில் திராவிட மக்களின் வாழ்வு ஒற்றித்து சமத்துவம் பெறவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தி வருகிறார். இவர் மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவராகவும், அதேவேளை மலேசிய திராவிடர் ஒற்றுமை இயக்கத்தின் தலைவராகவும் மேலும் உலகத்திராவிடர் ஒற்றுமை ஒருங்கிணைப்புப்பேரவையின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மலேசியாவில்,, 1979 ல் ஈழத்தமிழர் போராட்டக்களத்தை முதன் முதலில் கட்டமைத்தவராவார், அதையொட்டி இவர் நடத்திய போராட்டங்கள் அதிகமாகும்,அதனால், இவர் இந்தியா செல்ல விசா மறுக்கப்பட்டதுண்டு. இவர் ஈழத்தமிழர் அடைந்துவரும் இன்னலுக்கு முடிவு காண வேண்டி 2001ல் உலகத்தமிழர் நிவாரண வாரியத்தின் வழி டில்லி, மும்பை, தமிழ்நாடு உள்ளிட்ட நாடுகளில் உள்ள தலைவர்களான,இந்திய அதிபர், இந்தியப்பிரதமர்,தமிழக முதல்வர் என்பதோடு மட்டுமல்லாமல் மும்பையில் சிவசேனா தலைவர் பால் தக்கரையும் மூன்று நாள் வரை காத்திருந்து சந்தித்து; அவருடனான சந்திப்பில்ஈழத்தமிழர் இன்னல் தீர்க்க,நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும்,அவர்கள் போரை நடத்த நிதி உதவிசெய்யவும் கேட்டுக்கொண்டார்.
ஈழத்தமிழர் இன்னல் தீர இன்றுவரை அவர் ஆதரவு அளித்து வருகிறார்.இவர் கலைவாணர் நூலகம், தமிழ் இளைஞர் மணி மன்றம்,அகில மலாயா தமிழர் சங்கம்,போன்ற அமைப்புகளிலும் தமது தொடக்ககால பணிகளைத்தொடங்கியவர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்,இவரின் வாழ்க்கை வரலாற்றைநாவல் பாணியில் பல்வேறு கதாபாத்திரங்களோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டபக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
அந்த நூல் வெளிவரும் காலத்தில் ஆங்கிலத்தோடு இன்னும் பல மொழிகளில் வெளிவர வேண்டும் என்று எண்ணத்தையும் வைத்துள்ளார்.. அந்நூல் வெளிவருமேயானால் அரை நூற்றாண்டு, அரசியல்,தொழிற்சங்க, பத்திரிகையுலக, கலை இலக்கிய சமூக வாழ்க்கைப்பதிவுகளின் வரலாறாகயிருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணித்து வருகிறார்.