இந்தியாவின் ஏசாட் சோதனை குப்பைகளை உருவாக்கியுள்ளது : நாசா சொல்கிறது

0
89

கடந்த புதன்கிழமை செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த சோதனை மூலம்  ஆபத்து ஏற்படுத்தும்  செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது.

புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு தோட்டாவால் சுட்டு நாசமாக்கும் திறனுக்குச் சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் ஏசாட் சோதனை விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதாக நாசா தெரிவித்துள்ளது. 400 க்கும் மேற்பட்ட பாகங்களின் சிதறல்களாக குப்பைகள் வட்டப்பாதையில் இருப்பதாக தெரிவித்துள்ள நாசா, இது மிகவும் மோசமான விஷயம் என தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்க கூடிய விண்வெளி வீரர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக இந்த குப்பைகள் விளங்குவதாகவும், 10 செ.மீட்டர் மற்றும் அதற்கும் மேலான அளவில் உள்ள குப்பைகளை மட்டுமே கணக்கில் கொண்டு இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
 சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் சுற்றுவட்டப்பாதையில் உள்ள  செயற்கைகோள் ஆகியவற்றில் இருந்து கீழே மிக தாழ்வான நிலையிலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது எனினும் இவற்றின் குப்பைகள் மேல் பகுதிக்கு சென்று இருப்பது மிகவும் மோசமானது, இந்த செயல்கள் வருங்கால மனிதவிண்வெளி பயணத்திற்கு ஏற்றது இல்லை. இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நாசா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.