இலங்கை தேர்தலில் வெற்றி பெற்றார் கோத்தபய ராஜபக்சே – இன்று பதவி ஏற்பு

0
25

இலங்கை புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 வயதான கோத்தபய ராஜபக்சே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தொண்டர்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

அதில், “நாம் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். இலங்கை மக்கள் அனைவரும் இந்த பயணத்தில் ஒரு அங்கமாக உள்ளனர். நாம் பிரசாரத்தில் கடைப்பிடித்த அதே கண்ணியம் மற்றும் ஒழுக்கத்துடன் அமைதியாக வெற்றியை கொண்டாட வேண்டும்” என்று அவர் கூறி உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அனுராதபுரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்கிறார். அவருக்கு அந்த நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, அவர் பதவி விலக மறுத்தால், அவரை நீக்க முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதத்துக்கு முன்பு, நாடாளுமன்றத்தை கலைக்க முடியாத நிலையும் உள்ளது.

ரணில் விக்ரமசிங்கே பதவி விலகினால், புதிய பிரதமராக தனது சகோதரர் ராஜபக்சேவை நியமிக்க கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராஜபக்சே சகோதரர்கள், சீனாவுக்கு ஆதரவானவர்கள். அவர்கள் பதவிக்கு வருவதால், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது கடற்படை நடமாட்டத்தை அதிகரிக்கக்கூடும். அது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.