உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு?

0
183

வாஷிங்டன் :

உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் அதே அளவுக்கு பிற நாடுகள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையெனில் கூடுதல் வரி விதிக்கப்படும் என சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் டொனால்ட் டிரம்ப் வர்த்தகப்போர் நடத்தி வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தியது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், நெதர்லாந்து பிரதமர் மற்றும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களிடம் டிரம்ப் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பு மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்துவதாக விமர்சனம் செய்தார்.

மேலும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுமா? எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அமெரிக்காவை வர்த்தக அமைப்பு ஒழுங்காக நடத்தவில்லை எனில் சூழ்நிலையை பொருத்து எங்கள் முடிவு அமையும்’. என தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். சீனா போன்ற நாடுகள் உலக வர்த்தக அமைப்பை சுயநலத்திற்காக பயன்படுத்தி நல்ல ஆதாயம் அடைகின்றன.

வர்த்தக அமைப்பில் பல முக்கிய அம்சங்கள் இருந்தாலும் அவற்றில் டிரம்பிற்கு நம்பிக்கை இல்லை. எனவே, வர்த்தக அமைப்பின் செயல்முறைகளை சீரமைப்பது அவசியம். இது தொடர்பாகவே இனி எங்கள் நடவடிக்கைகள் அமையும்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.