ஏழை, எளிய மக்களுக்கு எந்தவகையிலும் பயன் இல்லாத உதவாக்கரை பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பேட்டி

0
84
சென்னை, தமிழக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லாத உதவாக்கரை பட்ஜெட் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் நிகழ்வில், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்பட முடியாத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்திருக்கின்றது. வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கியக் கடனுக்கு வட்டியை செலுத்துவதைத்தான் இந்த பட்ஜெட் தெளிவாகக்காட்டுகின்றது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி, அதனால் அவர்கள் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எல்லாம் எடுத்து பல பேரை சஸ்பெண்ட் கூட செய்து வைத்திருக்கின்றார்கள். அரசு ஊழியர்களினுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு ஏற்கனவே இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து அந்த குழுக்களும் முறையான ஆய்வு செய்து அதனுடைய அறிக்கையை அரசிடம் ஒப்படைத்து இருக்கின்றார்கள். ஆனால், ஒப்படைக்கப்பட்டு இருப்பது என்ன? அதை எப்படி நிறைவேற்ற இந்த அரசு முன் வரப்போகிறது என்பது பற்றி இந்த பட்ஜெட்டில் சொல்லாமல் இருப்பது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான எந்த அறிவிப்பும், எந்த நிலையிலும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1 கோடி படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய சூழ்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை பெருக்குவதற்கு எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மாநில அரசினுடைய கடன், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகமாகி நிதி மேலாண்மை ஒரு மோசமான தோல்வியை சந்திக்கக்கூடிய நிலையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது.

எப்படி கடந்த காலத்திலும் அதைத்தொடர்ந்து எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 110 விதியைப் பயன்படுத்தி அறிவிப்புகளை தொடர்ந்து சட்டசபையில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்களோ, அதேபோலத்தான் ஏட்டுச்சுரைக்காயாக இந்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நிதி ஒதுக்கீடு விளம்பரத்திற்காக செய்துவிட்டு அதைச் செலவே செய்யாமல் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய தோல்வியை இந்த அரசு அடைந்திருக்கின்றது என்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுகின்றது.

2017-2018-ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புக்கு 560 கோடி ரூபாயும், 2018-2019 ஆண்டில் 3,852 கோடி ரூபாயும் வர வேண்டும் எதிர்பார்க்கின்றோம் என்ற செய்தியை வெளியிட்டு இருக்கின்றார்கள். எதற்காக இந்த நிலை, ஏன் மத்திய அரசு இந்த நிதியை மாநில அரசுக்கு உள்ளாட்சி அமைப்புக்காக இதுவரை வழங்கவில்லை என்று கேட்டால், உள்ளாட்சி அமைப்பினுடைய தேர்தலை இந்த அரசு நடத்த முன்வரவில்லை என்பது தான் உண்மை.

அதேபோல, விவசாயிகளைப் பற்றியும் இந்த அரசு கவலைப்படவில்லை. நெல் கொள்முதல் குறைந்த விலையில் தான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல், கரும்புக்கான ஆதார விலையை இந்த அரசு கொஞ்சம் கூட உயர்த்தவில்லை. ஆகவே, நிதி நிலையைப் பொறுத்தவரையில் ஒரு திவாலான கம்பெனி போல், இன்னும் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கோடநாட்டில் எப்படி கொள்ளையடித்தார்களோ அதுபோல் தமிழ்நாட்டையும் கொள்ளையடித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் தான் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது என்பது தான் தி.மு.க.வின் கருத்து.

ரபேல் விவகாரத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ரபேல் வழக்கு என்பது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, அங்கு அளித்திருக்கக்கூடிய அறிக்கை மூடப்பட்ட சீல் வைக்கப்பட்ட ஒரு கவரை கொடுத்திருக்கின்றார்கள். அந்தக் கவரில் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்திய விவரங்கள் அதில் இடம்பெறவில்லை என்பது ஒரு முக்கியமான ஒன்று. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இதுவரை எவரும் சிக்கவில்லை. ஆனால், மோடி இப்பொழுது சிக்கியிருக்கின்றார்.

ஆகவே, பிரதமர் அலுவலகம் மூலமாக பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது. பிரதமர் அலுவலகத்திலிருந்து முறையாக தகவல் தராத காரணத்தினால் சுப்ரீம் கோர்ட்டின் கண்டிப்புக்கும், அதேநேரத்தில் கோர்ட்டு அவமதிப்புக்கும் பிரதமர் ஆளாகியிருக்கின்றார் என்பது, அந்த கட்டுரையினுடைய வெளிப்பாடு. அதற்கு இதுவே ஆதாரம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.