ஐரோப்பா முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில்: கடற்கரையில் தஞ்சம் புகும் மக்கள்

0
154

ஐரோப்பா கண்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், மக்கள் கடற்கரை மற்றும் நீர் விளையாட்டு பூங்காக்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

குளு குளுவென சாலைகளில் கூட ஏசி போட்டது போல காணப்படும் நாடுகள் அதிகம் உள்ள கண்டம் என்றால், அது நிச்சயம் ஐரோப்பாதான். ஆண்டின் பெரும்பாலான நாட்கள் இங்கு மிதமான தட்பவெப்பநிலை காணப்படுவதால் வெளிநாட்டு சுற்றுலா என்றாலே மக்கள் விரும்பும் இடம் ஐரோப்பிய நாடுகள்தான்.

தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் இந்த ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில், வரலாறு காணாத அளவு 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் நீர்நிலைகளில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான இடங்களில் குடிநீர் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஸ்பெயின் நாட்டில் வெப்பத்தை சமாளிக்க, பொதுமக்கள் விசிறிகளை கையில் வைத்துக்கொண்டே அலைந்து வருகின்றனர். மத்திய ஸ்பெயினான படாஜோஸ் பகுதியில், 47 டிகிரி செல்சியஸிற்கும் மேல் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், ஸ்பெயின் மக்கள், அவ்வப்போது, குடிநீர் மற்றும் குளிரூட்டும் மதுபானங்களை அருந்தி வருகின்றனர். அரசாங்கமும், ஆங்காங்கே, குடிநீர் வழங்கும் சேவைகளை அதிகரித்துள்ளது.

குளிர் பகுதியான ஜெர்மனியின் பெர்லின் நகரில், 24.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை எட்டியது. இதனால் மக்கள் கடற்கரைகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். வெளியூர் சுற்றுலா செல்வது போல், ஆடை, புத்தகங்களை எடுத்துக்கொண்டு கடற்கரை ஓரங்களிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.

ஐரோப்பாவின் வெப்பநிலை அதிகரிப்பு, இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மிருகங்களையும் விட்டுவைக்கவில்லை. ரோமில், வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டியதால், இங்குள்ள மிருகக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகள், நீரை விட்டு வெளியே வர தயக்கம் காட்டுகின்றன. புலி, கரடி என அனைத்து மிருகங்களுமே, நீர்வாழ் உயிரினங்கள் போல மாறியுள்ளன.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில், வெப்பம் அதிகரித்ததால், ஏராளமான மக்கள் பனிப் பூங்காவில் குவியத் தொடங்கியுள்ளனர்.
1977-ம் ஆண்டு கிரீஸில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே ஐரோப்பிய நாடுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பல நாடுகளில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதால், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வீசும் அனல் காற்றே இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் உள்ளதால் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வெப்ப அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.