கடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி

0
3204

வானொலி அறிவிப்பாளராக வேண்டும் எனும் தனது கனவை திருமணத்திற்கு பின் நனவாக்கி அதனை சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார் மலேசியாவைச் சேர்ந்த சாருஹாசினி ஆறுமுகம். கிள்ளானின் பிறந்த வளர்ந்த சாருஹாசினி, தற்போது இலங்கையின் பிரபலமான வானொலி நிலையங்களில் ஒன்றான வர்ணம் எஃப்.எம்மில் ஓர் அறிவிப்பாளராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

கலைக் குடும்பத்தில் பிறந்தவரான சாருஹாசினி, அறிவிப்புத் துறையில் அலாதி விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான பல முயற்சிகளை அவர் மலேசியாவில் மேற்கொண்டிருந்த போதும், அவரின் எண்ணம் எதிர்பார்த்த அளவுக்கு ஈடேறவில்லை.

எஸ்டிபிஎம் படிப்பை முடித்தப் பின்னர், சட்டத்துறையில் தமது மேற்கல்வியைத் தொடர்ந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் முடிவை எடுத்த சாருஹாசினியிடம் வானொலி அறிவிப்பாளர் ஆகும் தேடல் இருந்து கொண்டே இருந்தது.திருமணத்திற்குப் பின்னர், கணவருடன் இலங்கையில் குடியேற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டது. திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்பதை போல, அங்கேயும் இவரின் வானொலி அறிவிப்புப் பணிக்கான தேடல் இருந்து கொண்டே இருந்தது. கைமேல் பலன் என்பது போல, இலங்கைக்கு வந்த 2 வாரங்களிலேயே அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

மலேசியாவில் பேசும் தமிழுக்கும், இலங்கையில் பேசப்படும் தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்த போதும், அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, பணியைத் தொடங்கியவர் தற்போது தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார்.

‘வர்ணஜாலம்’ எனும் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார். பொது மற்றும் சினிமா தகவல்களை தாங்கி வரும் இந்நிகழ்ச்சியில் ஒலியேற்றப்படும் பாடல்களைக் கேட்பதற்காகவே நேயர்கள் கூட்டம் பெருகி வருகிறது. வார நாட்களில், அந்நாட்டு நேரப்படி மதியம் 3 மணி முதல் மாலை 5 வரை இந்நிகழ்ச்சி ஒலியேறி வருகிறது.

சாருஷாசினி கலை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தோம். இவர் திறமையாக பாடக்கூடியவர். தமிழ்ப் பாடல்களுடன் மலாய், ஆங்கிலப் பாடல்களையும் பாடும் ஆற்றல் கொண்டவர். குறிப்பாக மேற்கத்திய பாணியிலான பாடல்களைப் பாடுவதில் தனித் திறன் கொண்டிருப்பவர். இவரின் அப்பா இசைக்குழுவில் ‘பேஸ் கீட்டார்’ கருவி வாசிப்பவர். இவரின் இரண்டு தங்கைகளும் திறமையான பாடகிகள் ஆவர். மலேசியாவில் நடந்த இருகுரலிசை பாடல் போட்டியின் வெற்றியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் கடந்து வானொலி அறிவிப்புத் துறையில் பெயர் பதிக்கத் தொடங்கி இருக்கும் சாருஹாசினிக்கு ‘திசைகள்’ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.