கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம்- மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த வைகோ பேட்டி

0
144

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

அவ்வகையில், இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம். வாழ்நாளெல்லாம் தமிழர் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்’ என குறிப்பிட்டார்.
இதேபோல் நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் கூறும்போது, தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கருணாநிதி, அவர் மீண்டு வர வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் கவி அரசனாகவும், புவியரசனாகவும் ஜொலித்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், திரைப்பட இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.