கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் மோடி அரசுக்கு தோல்வி – ராகுல்

0
93
புதுடெல்லி:
இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிகளவில் பணம் பதுக்கல் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.
பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை.
இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2014-ல் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் மீட்கப்படும். மேலும், இந்தியர்களின் வங்கி கணக்குகளில் தலா 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றார்,
இதேபோல், கடந்த 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் கருப்பு பணத்தை மீட்கும் என்றார். கடந்த 2018-ல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களில் 50 சதவீதத்தினர் வெளியேறிவிட்டனர். இதனால் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் இல்லை என்றார்.
ஆனால், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. எனவே, கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here