கவர்னர் கிரண்பேடியை அடுத்தடுத்து சந்தித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி – ரங்கசாமி

0
208

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

புதுவை சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக 8 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்ட என்.ஆர். காங்கிரஸ் உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

ஆளும் கட்சியான காங்கிரசுக்கும், புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்களும் ஒருவரையொருவர் தாக்கி குற்றம் சாட்டி வந்தனர். அதோடு கவர்னர் பங்கேற்கும் விழாவை அமைச்சர்கள் புறக்கணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த குடியரசு தின விழாவையொட்டி நடந்த கவர்னர் தேனீர் விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். இதையடுத்து நடந்த காந்தி நினைவு தினத்திலும் கவர்னர், முதல்-அமைச்சர் ஒன்றாக பங்கேற்றனர்.

இதனால் கவர்னர்-காங்கிரஸ் அமைச்சரவை இடையே இருந்த மோதல் போக்கு மாறியது. இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கவர்னர் கிரண்பேடியை நேற்று மாலை 4 மணியளவில் சந்தித்து பேசினார். கவர்னர் கிரண்பேடியுடன் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி சுமார் 30 நிமிடம் தனிமையில் ஆலோசனை நடத்தினார்.

ரங்கசாமியுடன் என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன், செயலாளர் ஜெயபால் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர். கவர்னருடனான சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறியதாவது:-

எங்கள் தொகுதியில் உள்ள கனகன் ஏரியை சுத்தப்படுத்தி சுற்றுலா தலமாக கவர்னர் கிரண்பேடி மாற்றி உள்ளார்.

இந்த ஏரியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்க வந்தோம்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் புதுவை வருகை குறித்து கவர்னருடன் அவர் ஆலோசித்துள்ளார்.

சந்திப்பு குறித்து நாராயணசாமியிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்ததாக கூறினார். இருப்பினும் கவர்னர் கிரண்பேடியை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் அடுத்தடுத்து சந்தித்து பேசியது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.