காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல்

0
103

காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், காவிரி நதிநீர்ப் பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கான வரைவுத் திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைப்பானது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிகரானதாக இருக்கும் என்றும், வரைவுத் திட்டத்தின்படி ஐஏஎஸ் அதிகாரி அல்லது தொழில்நுட்ப வல்லுநர் தலைமையில் செயல்படும் அமைப்பில் தலைவர் உள்ளிட்ட 5 முழுநேர உறுப்பினர்களும், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியை சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுவிவரங்களும் மத்திய அமைச்சரவையின் பார்வைக்கு தாக்கல் செய்யப்படும் என்றும், அமைப்பின் பெயர் என்னவாக இருந்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி நதிநீரைப் பங்கிட்டு வழங்கும் பணியைச் செய்யும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வரைவுத் திட்டம் தயாராகிவிட்டாலும்கூட அதில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு மத்திய அரசு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்குமாறு மே 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here