சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க விரைவில் நடவடிக்கை – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

0
191

சென்னை:

இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காற்று மாசுபாட்டினை குறைக்கும் மின்சார பஸ் திட்டத்தை சி-40 முகமையின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மார்ச் 28-ந் தேதி தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கும், சி-40 முகமைக்கும் இடையே அறிக்கை கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக சி-40 முகமையின் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜேம்ஸ் அலெக்சாண்டர், ஜீர்கன் பாமான், 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னையில் முகாமிட்டு, தமிழக போக்குவரத்து, நிதி மற்றும் எரிசக்திதுறையின் உயர்மட்ட அரசு அலுவலர்களை சந்தித்து கலந்தாய்வு செய்தனர். குறிப்பாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.டபுள்யூ.சி.டேவிதாருடன் கலந்து ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்து, இந்த திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்னையில் 4 நாட்களாக முகாமிட்டு எந்தந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்குவது, அதற்கான டிரான்ஸ்பார்மர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக என்னை சந்தித்து இத்திட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

மேலைநாடுகளில் இது போன்ற மின்சார பஸ்களை இயக்கும்போது நடைமுறையில் ஏற்படுகின்ற சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரைவில் சென்னையில் இந்த பஸ்களை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்சார பஸ்களின் விலை மிக அதிகம். ஆனால் இயக்கப்படும் செலவு குறைவு. இவ்வகை பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரத்தை 54 பயணிகளோடு பயணிக்கலாம். ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தூரம் குறையும். மேலும், பஸ்களை சார்ஜ் செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

முதல்-அமைச்சர் அண்மையில் 515 புதிய பஸ்களை தொடங்கிவைத்தார். ஓரிரு மாதங்களில் அடுத்த 500 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட உள்ளது. மேலும் 4 ஆயிரம் பஸ்கள் படிப்படியாக இயக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.