டவுமா நகரை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றியதாக சிரியா அரசு அறிவிப்பு

0
147

டமாஸ்கஸ்:

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள சுமார் 4 லட்சம் பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையிலான மோதல்களில் சுமார் 1700 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் 7-4-2018 விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு பாடம் கற்பிக்கும் விதமாக அந்நாட்டின்மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, (இந்திய நேரப்படி) நேற்றிரவு 8.30 மணியளவில் அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தின்போது சிரியா மீது அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ரஷியா கொண்டுவந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் தோற்கடிக்கப்ப்ட்டது.

இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருந்த கவுட்டா நகரத்தை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றி விட்டதாகவும், அங்கு பதுங்கி இருந்த அரசு எதிர்ப்பாளர்கள் அனைவரும், ஒழிக்கப்பட்டதாகவும், விரட்டியடிக்கப்பட்டதாகவும் சிரியா அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சிரியாவின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசிய சிரியா ராணுவ செய்தி தொடர்பாளர், டமாஸ்கஸ் நகரின் புறநகரான கிழக்கு கவுட்டாவுக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பயங்கரவாதத்தில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.