நீர்நிலை குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

0
35

 

தமிழகத்தில் நீர்நிலைகளை மேம்படுத்திடும் விதமாக குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 14,098 நீர்நிலைகள் உள்ளது. இதில், பெரும்பாலான ஏரிகளில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஏரி கொள்ளளவை இழந்தும், கரைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த குடிமராமத்து திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டில் ரூ.331 கோடியும் அதே போல 2018ம் ஆண்டில் ரூ.332 கோடியும் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 170 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.  29 மாவட்டங்களில் உள்ள 1,829 நீர்நிலைகளை 4 மண்டலமாக பிரித்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன் படி சென்னை மண்டலத்தில் உள்ள 277 நீர்நிலைகளை தூர்வார ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்தில் உள்ள 543 நீர்நிலைகளை தூர்வார ரூ.109 கோடியும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதே போல மதுரை மண்டலத்தில் உள்ள 681 நீர்நிலைகளை தூர்வார ரூ.230 கோடியும், கோவை மண்டலத்தில் உள்ள 328 நீர்நிலைகளை தூர்வார ரூ.66 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.