திமுகவில் ஸ்டாலின், துரைமுருகன் இருவரின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது: ராமதாஸ் வாழ்த்து

0
189

ஏற்றுக் கொண்ட புதிய பதவிகளில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் முத்திரை பதிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் சென்னையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பாமக சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவுக்குள் இருவரின் பணிகளையும், உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞரணி அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட வகித்து இப்போது தலைவராக ஸ்டாலின் உயர்ந்திருக்கிறார்.

அதேபோல், துரைமுருகனும் மாணவரணி செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறமையை மெய்ப்பித்து விட்டு பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்ட புதிய பதவிகளில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய இருவரும் முத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.