தைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’

0
2139

தைப்பூசத்திற்கு பிரத்தியேகமாக பாடல் ஆல்பங்கள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக தயாரித்து வெளிவர இருக்கும் புதிய ஆல்பம் ‘ஆயூஸ்மாண் பவ’. நாட்டின் பிரபல பாடகியும் ஆஸ்ட்ரோ புகழ் பிருந்தா ரிஷிகுமாரின் முதல் தனி ஆல்பமாக ‘ஆயூஸ்மாண் பவ’ அமைந்துள்ளது.

பாலன்ராஜ் – எம்.ஜெகதீஸ் ஆகியோரின் கூட்டணியில் இந்த ஆல்பத்தின் இசை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளதாக ஆல்பத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான பாலன்ராஜ் தெரிவித்தார்.

ஆல்பத்தில் இடம்பெறும் 6 பாடல்கள் முத்தை தரும், சிவப்புரணம் போன்ற ஏற்கெனவே நமக்கு நன்கு அறிமுகமான, பிரபலமான பக்தி பாடல்களாகும். அந்த 6 பாடல்களின் தன்மை குறையாமல் இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இசையில் புதுவடிவம் கொடுக்கப்பட்டிருப்பதாக பாலன்ராஜ் சொன்னார்.

7ஆவது பாடல் ஹனுமன் மீது எழுதப்பட்ட பாடலாகும். இந்த ஆல்பத்திற்காவே சிறப்பாக எழுதி இசையமைக்கப்பட்ட பாடல் இதுவாகும். இந்தப் பாடலுக்கு வரிகள் கொடுத்திருக்கிறார் பிரபல பாடலாசியர் பீனிக்ஸ்தாசன்.

முழுக்க முழுக்க பக்தி பாடல் ஆல்பத்தில் வேலை செய்வது இதுவே முறையாக இருந்தாலும், இதற்கு முன் அஸ்தானா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவான நாடகத்திற்கு ‘ஜெய் அனுமான்’ எனும் பாடலை உருவாக்கி இருந்தேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகே, பிருந்தா ரிஷிகுமார் பக்தி பாடல் ஆல்பம் செய்யும் அவரின் எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்று பாலன்ராஜ் குறிப்பிட்டார்.

பக்தியில் திளைத்துப் போன மகான்களின் நாவில் இருந்து உதித்தப் பாடல்களுக்கு மறுவடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு எளிமையான காரியமில்லை. அப்பாடல்களை பாடியவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பாடல் அமைந்திருக்க வேண்டும் என்பதில் குழுவினர் அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

குறிப்பாக பாடலின் பொருள் மாறுபட்டு விடாமல் இருக்க உச்சரிப்பில் அதிகம கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. பாடல்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ப இசையமைக்கப்பட்டிருந்த போதும் பாரம்பரிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தைப்பூசத்திற்கு இந்த ஆல்பம் வெளியீடு காண்கிறது. அதற்கு முன்பதாகவே அறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும். அதன் தொடர்பான விபரங்கள் விரைவில் வழங்கப்படும் என அவர் ‘திசைகள்’ செய்திக்காக அவர் சொன்னார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here