நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும்: திருமாவளவன்

0
315

வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்தை அகற்றி விட்டு வரையப்பட்ட படங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் ஜெசி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியேவந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது இடங்களில் மதம் சார்ந்த படங்களை வரைவது ஏற்புடையதல்ல, சமூகவிரோதிகள் பொது இடங்களில் மதம்சார்ந்த படங்களை வரைவது கண்டிக்கத்தக்கது. மக்கள்மன்ற நிர்வாகிகள் மகேஷ், ஜெசி ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப்பெறவேண்டும்.

சிறைக்குள், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை சந்தித்து நலம் விசாரித்தேன். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக மனவேதனையுடன் தெரிவித்தார். அவருக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும். இதே வழக்கில் பேரறிவாளனுக்கு 2 மாதம் பரோல் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோன்று நளினிக்கும் பரோல்வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் 25 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருவதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது என்பதைவிட பா.ஜ.க.வின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. இதன் மூலம் பா.ஜ.க.வின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது.

வேலூர் சதுப்பேரியில் குப்பைகளை கொட்ட தடைவிதிக்கப்பட்ட பின்னரும் குப்பைகள் கொட்டப்படுவது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.

மாநகராட்சி, நகராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளனர். எனவே காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.