நெடுஞ்சாலைகளில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள்

0
36

கோலாலம்பூர் – வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்களில் மேலும் 11 கண்காணிப்பு மறைக்காணிகள் (கேமராக்கள்) பொருத்தப்படவிருப்பதாக போக்குவரத்துத் துணையமைச்சர் டத்தோ கமாருடின் ஜபார் அறிவித்தார்.

இந்த மறைக்காணிகளை நிர்மாணிக்கும் செலவுகளை தொடக்கக் கட்டமாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கும் பிளஸ் மலேசியா ஹைவே பெர்ஹாட் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். இதற்காக சுமார் 3 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும்.

இந்த மறைக்காணிகளை எங்கு நிர்மாணிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் எனினும் அதிகமான விபத்துகள் நடைபெறும் இடமாகக் கருதப்படும், பேராக் மாநிலத்தில் உள்ள மேனோரா சுரங்கப் பாதையில் மறைக்காணி ஒன்று அமைக்கப்படும் என்றும் கமாருடின் ஜபார் தெரிவித்தார்.

ஏற்கனவே 19 மறைக்காணிகளை பொருத்தியுள்ள போக்குவரத்து இலாகா கூடுதலாக நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த 11 மறைக்காணிகளையும் சேர்த்து நிர்வகித்து வரும்.

அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்டு பிடிக்கவும், கட்டுப் படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் இந்த மறைக்காணிகள் பெருமளவில் உதவுவதாகவும் கமாருடின் தெரிவித்தார்.

selliyal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here