“படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப்பட மாட்டேன்” -நடிகை அனுஷ்கா

0
264

ஓம் நமோ வெங்கடேசாய, பாகுபலி, பாக்மதி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தன. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சினிமா அனுபவம் பற்றி அனுஷ்கா சொல்கிறார்.

“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் என்னால் நடிக்க முடியும் என்று பெயர் வாங்கி இருக்கிறேன். அதுபோன்று கதையம்சம் உள்ள பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. எனது வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர்கள் இயக்குனர்கள்தான். நல்ல கதைகளில் என்னை அவர்கள் நடிக்க வைப்பதால்தான் பெயர் வாங்க முடிகிறது.

இந்த வருடம் எனக்கு மேலும் சிறப்பாக அமையும். நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. சிறுவயதில் புராண, சரித்திர கதை புத்தகங்களை வாங்கி படிப்பேன். கற்பனை கதைகளையும் படிப்பேன். என்னையும் அந்த கதையில் ஒரு கதாபாத்திரமாக நினைத்துக்கொண்டு கற்பனை உலகத்தில் வாழ்வேன்.

அதில் இருந்து மீண்டு நிஜ உலகத்துக்கு வர பிடிக்காது. அது இனிமையான அனுபவமாக இருக்கும். பெரிய ராஜ்ஜியங்கள், கோட்டைகள் எல்லாம் எனது கற்பனையில் வரும். பல்லக்கும் அதில் நான் மகாராணியாக இருப்பது போலவும் கற்பனைகள் செய்து கொள்வேன். அந்த கற்பனை உலகின் தாக்கம்தான் இப்போது அதுபோன்ற புராண படங்களில் நடிப்பதற்கு எனக்கு தைரியத்தை கொடுத்து உள்ளது.

பாகுபலி படம் சிறுவயதில் நான் கற்பனை செய்தது போலவே அமைந்தது. என்னால் யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது என்று நினைக்கிறேன். வெற்றியை எதிர்பார்க்க மாட்டேன். கடமையை செய். பலனை எதிர்பாராதே என்பது எனது சித்தாந்தம். கஷ்டப்பட்டு நடிப்பேன். படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப்படுவது இல்லை.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.