பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் பள்ளி கல்வித்துறை உத்தரவு

0
33

சென்னை,

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்புகளில் சேருவதற்கோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வெளியே செல்லும்போது அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படுகிறது. அதில் மாணவரின் பெயர், சாதி, மதம், தேர்ச்சி பெறுவதற்கு உகந்தவரா, நன்னடத்தை சான்று என்பது உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டு வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்கும் மாற்றுச் சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிட வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சாதி பெயர் வேண்டாம்

இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலமாக மாற்றுச்சான்றிதழ் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் மூலமாக சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

வருவாய்த்துறை சார்பில் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் மாற்று சான்றிதழில் மாணவர் எந்த சாதியை சார்ந்தவர் என்று குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. மாற்று சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிடவேண்டிய இடத்தில் ‘வருவாய்த்துறை வழங்கும் சாதி சான்றிதழை ஏற்கவும்’ என்று மட்டுமே குறிப்பிடவேண்டும். மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை அல்லது சமயம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழை வழங்கவேண்டும்.

இணையதளம் மூலமாக…

மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ சாதி தொடர்பான பத்தியை நிரப்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டால், அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை வழங்கலாம். இதற்கான அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முறையாக தெரிவித்து, வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையதளம் மூலமாக மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here