பாராளுமன்ற தேர்தல்: நாடு முழுவதும் ரூ.3,386.08 கோடி மதிப்பில் கணக்கில் வராத பணம், தங்கம் பறிமுதல்

0
59
புதுடெல்லி,
பாராளுமன்றத்திற்கான 7 கட்டத் தேர்தலில் 5 கட்டத் தேர்தல் முடிந்து 6-ஆம் கட்டத் தேர்தல் நாளை  மே 12-ஆம் தேதியும் 7-ஆம் கட்டத் தேர்தல் 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம் கொண்டு சென்றவர்களிடம் இருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். நாடு முழுவதும் நடந்த அதிரடி சோதனைகளில் தென்மாநிலங்களில் இருந்தே அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தே அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டவை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களிலேயே இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ரூ.3,386 கோடி: மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் மொத்தமாக ரூ.816.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.279.76 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 ரூ.1,253.50 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.980 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.56.41 கோடி மதிப்பிலான இதர பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக நாடு முழுவதும் ரூ.3,386.08 கோடி மதிப்பில் கணக்கில் வராத பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மே 9-ஆம் தேதி வரை,தமிழகத்தில் மொத்தம் ரூ.225 கோடியும், இரண்டாவதாக ஆந்திராவில் ரூ.138.66 கோடியும், மூன்றாவதாக தெலங்கானாவில் ரூ.70.62 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரூ.61.1 கோடி, மகாராஷ்டிரத்தில் ரூ.53.08 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் (80 தொகுதிகள்) ரூ.44.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், லட்சத்தீவு மற்றும் மிசோரத்தில் பணம் பறிமுதல் எதுவும் செய்யப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளின்படி பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், பணத்துக்கு உரிய சான்றிதழ்களைக் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்வது உண்டு.
இந்தியா முழுவதும் ரூ.279.76  கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.   மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. ரூ.44.07 கோடி மதிப்பிலான 16.08 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக கர்நாடகத்தில் ரூ.37.85 கோடி மதிப்பிலான 9.6 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூன்றாவதாக மத்திய பிரதேசத்தில் ரூ.29.28 கோடி மதிப்பிலான 30.1 லட்சம் லிட்டர் மதுபானங்களும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் ரூ.29.1 கோடி மதிப்பிலான 36.19 லட்சம் லிட்டர் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ரூ.3.65 கோடி மதிப்பிலான 2.21 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுவுக்கு பெயர்போன புதுச்சேரியில் ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபானங்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் விலைவாசிக்கேற்ப மதுபானங்களின் விலைகள் மாறுபடுகின்றன.
போதைப்பொருள்கள் பறிமுதலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. அங்கு ரூ.524.34 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக தலைநகரான புதுடெல்லியில் ரூ.370.33 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும், பஞ்சாபில் ரூ.214 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் தமிழகத்தில் தான் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.709.54 கோடி மதிப்பில் 3,073 கிலோ தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் ரூ.980 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் இருந்தே பெரும்பான்மையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக உத்தர பிரதேசத்தில் ரூ.71.78 கோடி மதிப்பில் 731.64 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் ரூ.71.21 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய கணக்கு காண்பித்தவர்களிடம் தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபர், அருணாசல பிரதேசம், சண்டிகர், தாத்ரா-நாகர்-ஹவேலி, ஹிமாசலப்பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவு, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தங்கம் பறிமுதல் செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here