பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு! தெலங்கானா அறிவிப்பு

0
232

ஹைதராபாத்தில் பிச்சைக்காரர்கள் இருப்பது குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.500 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று  தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் பங்கேற்ற உலகத் தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது. அதையொட்டி அந்த நகரத்தில் இருந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் சிறைச்சாலை மைதானங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆஷ்ரமம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். இந்தநிலையில், ஹைதராபாத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தால் ரூ.500 சன்மானமாக வழங்கப்படும் என்று தெலங்கானா மாநில சிறைத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கனா மாநில சிறைத்துறை டி.ஜி. வி.கே.சிங், ‘பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு அடுத்தநாளே ரூ.500 வழங்கப்படும். பிச்சையெடுப்போரின் மறுவாழ்வுக்காக ’வித்யாதனம்’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். திறன் கொண்ட பிச்சைக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காகவே நகரில் 6 புதிய பெட்ரோல் பம்ப்கள் மற்றும் 6 ஆயுர்வேத கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சியின் உதவியுடன் இதுவரை 741 ஆண்கள் மற்றும் 311 பெண் பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 476 ஆண்கள் மற்றும் 241 பெண்கள், இனிமேல் பிச்சையெடுக்க மாட்டோம் என்று உறுதியளித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கென வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன. தெலங்கானா மாநிலத்தின் தெருக்களில் யாரும் பிச்சையெடுக்கும் நிலைக்கு வரக்கூடாது என்ற நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.