‘பிரெக்ஸிட்’ விவகாரம்: ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை

0
38
‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவு அளித்தனர்.
முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார். ஆனால் இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தெரசா மேவுக்கு சவாலாக உள்ளது.
ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எப்படி எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.
அதாவது ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை என எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பான ஒப்பந்தத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நிகழ்ந்தாக வேண்டும்.
இதற்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலையும் பெற்றார். ஆனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இது தெரசா மேவுக்கு தலைவலியாக அமைந்தது. இதையடுத்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என தெரசா மே வலியுறுத்தினார். ஆனால் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் தெரசா மேவின் முடிவை நிராகரித்தனர்.
மாறாக ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பிடம் மறுபேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும்படி எம்.பி.க்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.
ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு வேறொன்றும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ காலக்கெடு விரைவில் முடிய இருப்பதால் தெரசா மே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார்.
இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தெரசா மே நேற்று பெல்ஜியம் சென்றார். அங்கு அவர் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளாட் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here