பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதில் 10 வருடங்கள் கழித்து தலிபான் பொறுப்பு ஏற்பு

0
296
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் பங்கேற்ற போது வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் அவருடன் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதல் தொடர்பாக தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த கொலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப்பிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணை முடிவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தலிபான் பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் பணியில் அலட்சியமாக இருந்ததாக இரு அதிகாரிகளுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது பெனசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டதற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.
‘இன்கிலியாப் மெஹ்சூத் தெற்கு வஜிரிஸ்தான் – பிரிட்டிஷ் ராஜ் முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரையில்’ என்ற தலைப்பில் தலிபான் தலைவன் அபு மன்சூர் அசிம் முப்தி எழுதிய புத்தகத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என டெய்லி டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
தற்கொலை பயங்கரவாதிகள் பிலால் மற்றும் இக்ராமுல்லாக் ஆகியோரால் பெனாசீர் பூட்டோ கொலை முன்னெடுக்கப்பட்டது. பிலால்தான் பெனாசீர் பூட்டோவை துப்பாக்கியால் சுட்டது. பின்னர் தன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதும் இக்ராமுல்லாக் அப்பகுதியில் இருந்து தப்பிவிட்டார். இப்போதும் உயிருடன் தான் உள்ளார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் 2007 அக்டோபரில் பெனசீர் பூட்டோ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததற்கும் தலிபான் பொறுப்பு ஏற்று உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.