பொதுமன்னிப்பு வழங்கிய குவைத் அரசு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்

0
185

குவைத் சிட்டி:

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான குவைத்தில் சுமார் 11 லட்சம் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் குவைத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், விசா மற்றும் பணி அனுமதிக்காலம் முடிந்து சட்டவிரோதமான தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குவைத் அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஜனவரி 29 (நேற்று) முதல் பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் தண்டனை மற்றும் அபராதத்தொகையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் தங்களது நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்திய தூதரத்திலும் கடந்த இரு நாட்களாக இந்திய தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். காலை 4 மணிக்கே தூதரகத்தின் வெளியே காத்திருக்கும் தொழிலாளர்கள் இரவு வரை அங்கு இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் வகையில் தூதரகத்தில் வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு தொழிலாளர்களின் ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியதுள்ளது. ஆனால், அதற்கேற்ப தூதரகத்தில் பணியாளர்கள் இல்லை என தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், பல தொழிலாளர்களின் பாஸ்போர்ட்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் திருப்பி அளிக்கவில்லை.

இதில், சட்ட ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதால் அதனை தீர்க்க வெகு நாட்களாகும். அதுவரை தொழிலாளர்களை அங்கு தங்க வைக்க முடியாது என்பதால், தற்காலிகமாக சில அனுமதிச்சீட்டை அளித்து அவர்களை நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படுகிறது என அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தூதரக அதிகாரிகள் விரைந்து செயல்பட மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தூதரகத்தை போலவே, இலங்கை மற்றும் வங்காளதேச தூதரத்திலும் அதிகளவிலான தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.