பொள்ளாச்சி சம்பவம்: பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

0
29
சென்னை,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
நடிகர்கள் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் கண்டனக் குரல்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில்,  பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை  செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் உரிய தண்டனையும் வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் கல்லூரி வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here