முக ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம்: கனிமொழி பேச்சு

0
106

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்முடி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் பெண் விடுதலைக்கு வித்திட்டவர் பெரியார். அவரது கனவுகளை சட்டம் இயற்றி நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி. உதாரணமாக பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், சமத்துவபுரம் போன்ற எண்ணற்ற திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தேர்ந்தெடுக்கும் எந்த துறையிலும் அவர் முதன்மையாக விளங்கினார்.

ஒருகாலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்கமுடியும் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றி இன்று ஏழை வீட்டு பிள்ளைகளும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வை ஏன் பல மாநில முதல்வர்கள் எதிர்க்கவில்லை என கேட்டபோது அவர்கள் கூறுகையில் எங்கள் மாநிலத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. எனவே நீட் தேர்வு வந்தால் எங்கள் மாநில பிள்ளைகள் உங்கள் மாநிலத்தில் படிப்பார்கள் என்றனர். ஆனால் நமது மாநில பிள்ளைகளின் படிப்பு உரிமை போகின்றதே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வுக்கு பினாமி அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது.

மாநில உரிமை பறிபோவது குறித்து எதிர்த்து பேச துணிவு இல்லை. ஓ.பி.எஸ்.ஐ. போல் இ.பி.எஸ்.சும் விரைவில் தியானத்தில் ஈடுபடுவார்.

8 வழிச்சாலை தொடர்பான அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும். இந்த திட்டத்தால் எவ்வளவு பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். விவசாயம் பாதிக்கும் என்ற நிலையை இந்த அரசு உணரவில்லை. இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களை சந்திக்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் அரசு கைது செய்து அடக்குமுறையை கையாளுகின்றது. ஒரு திட்டத்தை கொண்டு வரும் முன்னர் அது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதனை செயல்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை குறித்து தெளிவான அறிக்கை இல்லை. அதில் யார்? யாரை சந்தித்து எந்த எந்த அதிகாரிகள் பேசினார்கள் என்ற விபரங்கள் சரியாக இல்லை. அந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆகும்.

தமிழகத்தில் சாலைகள் அமைப்பதில் ரூ.1500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக முதல்வர் மீது தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு சொல்லியிருக்கின்றார். அதற்கு இதுநாள்வரை பதில் இல்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. இந்த அரசை மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர்.

சத்துணவு, முட்டை, பருப்பு என பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கும் உணவில்கூட ஊழல் செய்யும் இந்த ஆட்சியை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள். அதே சமயம் விரைவில் தமிழகம் தலைநிமிர செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினரும் தமிழகத்தில் தீவிரவாதம் தோன்றியிருப்பதாகவே பேசுகின்றனர். ஆட்சி பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு யார் தீவிரவாதி, சமூக விரோதி என்று தெரியவில்லையா? அதனை யார்? யார்? என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் தான் தீவிரவாதம் என்பேன்.

தமிழகத்தில் தீவிரவாதம் என்ற ஒரு பொய்யான வதந்தியை பரப்பிவிட்டு அடக்குமுறையில் ஈடுபடுவதுடன், மக்களை அச்சத்திற்குள்ளாக்குகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.