மேற்கு வங்காள மக்களவை தேர்தல்; 5 திரை பிரபலங்களை நிறுத்த மம்தா பானர்ஜி முடிவு

0
33
கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மக்களவை தேர்தலுக்கு 5 திரை பிரபலங்களை நிறுத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன.  அங்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 திரை பிரபலங்களை வேட்பாளர்களாக நிறுத்தினார்.  அவர் நிறுத்திய 5 பேரும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன்முறையாக திரை பிரபலங்களை அவர் நிறுத்த தொடங்கினார்.  மொத்த தொகுதிகளில் 2009ம் ஆண்டில் 19 தொகுதிகளிலும், 2014ம் ஆண்டில் 34 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
இக்கட்சியானது, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமடைந்த நடிகர், நடிகர்களை பல பொது கூட்ட மேடைகளில் கலந்து கொள்ள செய்துள்ளது.
இந்நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் பிரபல வங்காள திரைப்பட நடிகை மிமி சக்ரபோர்த்தியை இக்கட்சி நிறுத்துகிறது.
கடந்த 1984ம் ஆண்டில் இந்த தொகுதியில் இருந்தே மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியின் இளம் வேட்பாளராக களம் இறங்கினார்.  இந்த தேர்தலில் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சோம்நாத் சாட்டர்ஜியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசீர்ஹாட் தொகுதியில் திரைப்பட நடிகை நஸ்ரத் ஜஹான் போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரான இத்ரிஸ் அலி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவார்.
இவர்களை தவிர்த்து, நடிகர்கள் மற்றும் எம்.பி.க்களாக இருக்கும் தீபக் அதிகாரி, சதாப்தி ராய் மற்றும் மூன்மூன் சென் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதில் தீபக் மற்றும் ராய் முறையே கடால் மற்றும் பீர்பும் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.  பங்குரா தொகுதிக்கு பதிலாக அசன்சோல் தொகுதியில் சென் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த காலங்களில் பா.ஜ.க.வும் திரை பிரபலங்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது.  திரைப்பட நடிகர் மற்றும் பின்னணி பாடகரான பாபுல் சுப்ரியோ மற்றும் மகாபாரத சீரியலில் திரவுபதியாக நடித்த ரூபா கங்குலி ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here