ராணுவத்தின் செயல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்

0
54
புதுடெல்லி,
தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு படைகள் பற்றி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் தளபதிகள் மற்றும் 150 முன்னாள் ராணுவத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. நேற்று முதற்கட்ட தேர்தல் தொடங்கியது. மே 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகள், மக்களை கவர தேசபக்தி  ராணுவம்  பற்றியும் பேசி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘பாலக்கோட் தாக்குதலில் நரேந்திரமோடியின்  ராணுவப்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி திரும்பியது என்று ராணுவத்தை அரசியல் பிரசாரத்தில் தொடர்பு படுத்தி பேசினார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்பு படைகள் பற்றி பேசுவதை எதிர்த்து முன்னாள் தளபதிகள், 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். முப்படைகளின் தளபதி என்ற முறையில் ராம்நாத் கோவிந்துக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களை அரசியல் கட்சிகள் தங்களின் ஓட்டுகளுக்காக பயன்படுத்துவது நாட்டுக்கே எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ராஷ்டிரபதி பவன் மாளிகை வட்டாரங்கள்  இந்த தகவலை மறுத்துள்ளன. இது போன்ற எந்த கடிதமும் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை என்று ராஷ்டிரபதி பவன் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here