‘விஜய் பட ஷூட்டிங்குக்கு மட்டும் சிறப்பு அனுமதியா?’ – தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

0
241

விஜய் படத்துக்கு மட்டும் ஷூட்டிங் நடத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை’ என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

மேலும், கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தம் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வருகிற 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள விக்டோரியா ஹாலில் விஜய் நடிக்கும் ‘தளபதி 62’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

‘மற்ற படங்களின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, விஜய் படத்துக்கு மட்டும் தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதி கொடுத்ததா?’ என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மத்தியிலும் விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்டிரைக் பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட போதே, ஏற்கெனவே சில இடங்களில் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கியிருந்தால், ஓரிரு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். காரணம், இதனால் தயாரிப்பாளர்களின் பணம் வீணாகும். அந்த அடிப்படையிலேயே விஜய் படத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி கோரியதால், படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

விஜய் படத்துக்கு மட்டும் இந்த அனுமதி தரப்படவில்லை. மதுரையில் ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இரண்டு நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்பதால், அவருக்கும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இன்னும் சில நிறுவனங்களும் அனுமதி பெற்றுள்ளன. எனவே, விஜய் படத்துக்கு மட்டும் தான் சிறப்பு அனுமது என்பது தவறான தகவல்” என்று துரைராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.