பொதுத் தேர்தலும் –ம இ கா தலைமைத்துவமும்

0
337

சிறப்புப் பார்வை!

பொதுத் தேர்தலும் –ம இ கா தலைமைத்துவமும்

நாடாளுமன்றத் தொகுதிகளில் நிலை நிறுத்தப்போகும் வேட்பாளர்கள் யார் ?

தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்களா?

முரண்டுப்பிடித்து முண்டாத் தூக்குபவர்களா?

——————————————

ம இ காவின் 9 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான  வேட்பாளர்களாக யார் , யாரெல்லாம் நிறுத்தப்படுவார்கள்,

அதேபோன்று 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்  யார், யாரெல்லாம் தகுதிப்பெறுவார்கள் என்ற கேள்விக்கு

சில ஊடகங்கள் தங்கள் விருப்பம் போல செய்திகளை அள்ளிப்போட்டு வருகின்றன.

கட்சியின் தலைமையானது; பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி

வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய காரணமும் காரியமும் இருக்கவே செய்யும்.

அதில் வெளியார் சில கருத்துக்களை முன் வைக்கலாமேயொழிய இப்படித்தான் தீர்ப்பும் தீர்மானமும் இருக்க வேண்டுமென்று அழுத்தம் எதுவும் கொடுக்க முடியாது.

குறிப்பாக கட்சியின் தலைவராகயிருப்பவருக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் தேவையான நெருக்கடிகளும் தேவையற்ற நெருக்கடிகளும் இருக்கவே செய்யும்.

கிளை, தொகுதி, மாநிலம் உட்பட மேலும் பல உயர் மட்ட பதவியில்  இருப்பவர்கள் வரை, தேர்தலில் குதிக்க எல்லாவகையான உரிமைகளும் இருக்கவே செய்யும்.

இருப்பினும் கட்சித் தலைமைமானது எல்லா வகையான நடப்புகளையும்,  சூழ்நிலைகளையும் அலசுவதோடு, அதேவேளை மக்களின் மனப்பதிவு களையும் தீர்க்கமாக தீர்மானித்து முடிவுகள்  எடுக்க வேண்டியிருக்கும்.

அதனாலே, ம இ கா தலைமையானது  அது குறித்து என்ன முடிவு எடுத்தாலும், அதுவே கட்சியின் முடிவாகவும் இறுதி தீர்ப்பாகவும் அமைவதைத் தவிர்க்க வேறுவழி இருக்க முடியாதுதான்.

இருப்பினம் ஒர் ஊடகவியலாளனின் பார்வையானது சிலவகையான கண்ணோட்டங்களோடும், பெருவாரியான மக்கள் விருப்பங்களோடும் முன்னெடுக்க வேண்டிதான் இருக்கும்.

*சிகாமாட் தொகுதி–

அந்த வகையில் வருகின்ற தேர்தலில் ம இ கா ஒன்பது நாடளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியானால், ம இ கா தேசியத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் மீண்டும் ஜொகூர் மாநிலத்திலுள்ள சிகாமாட் தொகுதியில்தான் போட்டியிடுவார், அவர் அத்தொகுதியில் போட்டியிடுவது பெருமளவு உறுதியான விசயமாகும். இதற்கிடையில் அவரின் அரசியல் வைரிகளால் அவர் அத்தொகுதியை விட்டு  மற்றொரு தொகுதிக்கு மாறுவார் என்று கிளப்பிவிடும் வதந்தியை தவுடுப்பொடியாக்கி; மீண்டும் மகத்தான வெற்றியை சிகாமாட்டில் பெறுவார் என்பதில் எந்த மாறுப்பாடும் வேறுப்பாடும் இருக்கப்போவதில்லை.

*சுங்கை சிப்புட் தொகுதி

பேராக்கில் மிக முக்கியமான தொகுதியென்று கருதப்படும் சுங்கைசிப்புட்டில் இந்த முறை எதிர்க்கட்சி கூடாரம் பெருமளவு சேதாரமாகிவிட்டது. மக்கள்

போராளியான டாக்டர் ஜெயக்குமார், 2008/2013 என இரண்டுத்தவணைகளில் வெற்றிக்கொண்ட அந்த தொகுதியில், அதற்கு முன்பு 1974 லிருந்து 2008 வரை ம இ காவின் தேசியத்தலைவரான துன் சாமிவேலு தொடர்ச்சியாக வெற்றிக்கொண்ட தொகுதியாகும் அது!. அப்படிப்பட்ட அந்த தொகுதி இந்த முறை மீண்டும் ம இ கா வசமாகும் என்பது நிதர்சனமான உண்மையாகும். இந்த முறை சுங்கை சிப்புட் தேர்தல் களம் நான்கு முனைகளில் சம்பவிக்கும்; ஒன்று-  ம இ கா-( பாரிசான்) இரண்டாவது ஜசெக, மூன்றாவது பி எஸ் எம், நான்காவது பாஸ் எனவும்

இவற்றிக்கிடையே  சில சுயேட்சைகளும்  களமிறங்க பெருமளவு சாத்தியமுண்டென்றே தெரிகிறது. இதனால் நடப்பு வேட்பாளரான ஜெயக்குமார் பலமிழந்து காணப்படுகிறார். இத்தகைய நெருக்கடி சூழ்ந்த நேரத்தில் ம இ கா வின் வேட்பாளராக களத்தில் இறங்கப்போகும் வேட்பாளர் வேள்பாரியாகயிருக்கவே பெருமளவு சாத்தியமுண்றென்றாலும், அவர் களத்திலே இறங்கும் போது அவர் பலமுள்ள வேட்பாளரா? அல்லது பலம் குறைந்த வேட்பாளரா? என்பதை ம இ கா தலைமைத்துவம் நன்கு சீர்தூக்கிப்பார்க்க வேண்டியுள்ளது.

அதற்கு காரணம் கடந்த காலத்தில் அவரைச்சுற்றி தேவையின்றி ஒட்டிக்கொண்டுள்ள ஏகப்பட்ட பிரச்சனைகள்;  எதிர்க்கட்சிகளின் ஊதுக்குழலாக எதிரொலிக்க சாத்திமில்லையென்று சொல்லிவிட முடியாது.

இருப்பினும் கட்சியிலே நடப்புப் பொருளாளராகயிருப்பதாலே, அவருக்காக சுங்கை சிப்புட் களம் காத்திருப்பதாகவே தெரிகிறது. இதற்கிடையில் கடந்த காலங்களில் டத்தோ பழனிவேலின் தீவிர ஆதரவாளராக மட்டுமல்ல, ம இ கா தலைத்துவம் எடுத்த பல்வேறு சட்டமுன் வடிவங்களுக்கு முரண்டுப் பிடித்தவராகவும், அதனால் நீதிமன்றங்களால் பரவலாக அறியப்பட்டவராகவும், அதேவேளை இன்றைய தலைமைத்துவத்திற்கு எதிராக தெரு ஆர்பாட்டங்களிலெல்லாம் பெருமளவு  ஈடுபட்டவரான கோலாலம்பூர்  இராமலிங்கம், இன்று; இன்றைய தலைமைத்துவதோடு இணக்கமும் நெருக்கமும் கொண்டிருப்பதால், பாரி, ஒரு சமயம்  சுங்கை சிப்புடிலிருந்து நலிவிப்போனாலும், அப்படி ஒரு சமயம் இராமலிங்கம், களம் காண நேரிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை, அப்படியொரு வாய்ப்பு இராமலிங்கத்திற்கு கிடைக்குமானால், “பகைவனுக்கும் அருள் புரிபவராக இன்றைய ம இ கா தேசியத்தலைவர் இருக்கிறார்” என்றுதான் மீண்டும் பதிவிட வேண்டியுள்ளது.

*தாப்பா தொகுதி–

அடுத்து பேராக்கிலுள்ள, தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டரசுப் பிரதேச ம இ கா தொடர்புக்குழு தலைவரான டத்தோ சரவணனுக்கு மீண்டும்  போட்டியிடும் வாய்ப்பைப்பெறுவார் என்றே தெரிகிறது. இருப்பினும் இவருக்கு இந்த முறை   போட்டியிட வாய்ப்பு வழங்குவதால், அவருக்கான எதிர்ப்பும்  ஒரளவு கிளம்பாமல் இல்லை, காரணம் இவர்  இரண்டுத் தவணைகள் மேலவை உறுப்பினராகவும், அதே போன்று இரண்டு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதேவேளை  தொடர்ந்து  இரண்டு தவணைகள்  துணையமைச்சராகவும் இருக்கும் வாய்பைப் பெற்றிருப்பதாலே;

மீண்டும் அப்படியொரு வாய்ப்பு வழங்குவது சரியாகப்படாது என்ற கருத்தியலை ம இ கா தலைமையிடம் பலர் முன் வைக்காமல் இல்லை, இருப்பினும் தாப்பாவைப் பொறுத்தவரை சரவணனுக்கிருக்கிற வெற்றி வாய்ப்பு, மற்றவர்களுக்கு இருக்குமா  ?என்ற கேள்வியும் தொத்திக்கொண்டிருப்பதால், தாப்பா இந்த முறையும் அவர் வசமேபடும் என்று தெரிகிறது.

*உலுசிலாங்கூர் தொகுதி–

அடுத்து சிலாங்கூரிலுள்ள, உலுசிலாங்கூர் தொகுதியைப் பொறுத்தவரை மீண்டும் ம இ கா மத்திய செயலவை உறுப்பினரான  டத்தோ ப. கமலநாதனுக்கு  போட்டியிட கட்சித்தலைமை அனுமதித்தாலும், அந்த தொகுதியை இந்த முறை அம்னோ தன்வசப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறது. இதையும் மீறி போட்டியை கமலநாதன் சந்திப்பாரேயானால்.  மலாய், இந்திய வாக்காளர்கள் கமலநாதனை வெற்றிப்பெற வைப்பார்களா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை, இரண்டு தவணைக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் துணையமைச்சராகவும் கமலநாதன் இருந்துள்ளார்.

அதனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவது அவசியமா என்ற பலரின் கடும் கேள்விக்கிடையேதான் அவர்  மீண்டும் போட்டியிட்டால்  தலைத் தப்புவாரா? அப்படி அவர் தலை தப்பவில்லையானால் ம இ கா  வெற்றிப்பெற வேண்டிய  அந்த தொகுதியை தேவையின்றி  இழக்க வேண்டிவரலாம், இந்த நெருக்கடியை ம இ கா தலைமை எப்படி கையாளப்போகிறது என்று தேர்தல் நேரத்தில் தெரியவே செய்யும். இருப்பினும் இறுதி நேரத்தில் ம இ காவின் புதிய வேட்பாளர்  அத்தொகுதியில் களம் காணமாட்டாரென்று அறுதியிட்டு சொல்லிவிடவும் முடியாது. அதே வேளை இந்த முறை மும்முனைப்போட்டியில் அத்தொகுதி களம் காணுவதால் ம இ கா மீண்டும் அத்தொகுதியை வெற்றிக்கொள்ளவே செய்யும்.

*கேமரன்மலை தொகுதி—

பகாங் மாநிலத்திலுள்ள கேமரன்மலையைப் பொறுத்தவரை  சங்கடங்களும் குழப்பங்களும் நிறைந்த தொகுதியாகி விட்டது. நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ பழனிவேல் அந்த தொகுதியைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். அதோடுமட்டுமல்ல, டான்ஸ்ரீ கேவியசுடன் ஒரு கூட்டணியும், பினாங்கு இராமசாமியுடன் ஒரு கூட்டணியும் வைத்துக்கொண்டு; தனது திரிசங்கு நிலைக்கேற்ப தொகுதியை  பெருமளவு சீரழித்து வைத்துள்ளார். தனக்கு ஒரு கண்ணுப்போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்றளவிலேயே அவரின் தொகுதிப்பணி அமைந்திருக்கிறது. இவற்றிற்கிடையே ம இ கா  தலைமை,  தொகுதிப்பணிகளைக் கவனிக்கவும் தேர்தலுக்கான அடுத்த கட்டப்பணிகளைக் முன்னெடுக்கவும் ம இ கா தேசிய இளைஞர் பகுதித்தலைவரான சிவராஜை நியமித்து இருப்பதாலே, அவரே அந்ததொகுதியின் வேட்பாளராகவும் களம் காணுவார் என்றே தெரிகிறது. பல்வேறு பிரச்சனை உள்ளடக்கியிருக்கிற அந்த தொகுதியை கட்சியின் இளைஞர் பகுதிக்கு ஒதுக்கப்படுமேயானால் இளைஞர்கள் பெருமளவு களத்தில் இறங்கி, அந்த தொகுதியை மீட்டெடுக்க முடியும் என்று  ம இ கா தலைமைத்துவம் செய்த  முடிவை வரவேற்க வேண்டிதான் உள்ளது.

*காப்பார் தொகுதி—

சிலாங்கூரின் மற்றொரு தொகுதியான காப்பாரை பொறுத்தவரை வேட்பாளர்கள் பட்டியல் பலவாறு நீணடுக்கொண்டே இருக்கிறது. பலரின் பெயர்கள் பட்டியலிடப்படுகிறது. ஒரு காலத்தில், ம இ கா வின் வெற்றிக்கோட்டையாக  திகழ்ந்த அத்தொகுதியில்தான் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ கோவிந்தராஜு, டி. பி. விஜேந்திரன், திருமதி லீலா இராமா, டத்தோ கோமளா கிருஷ்ணமூர்த்தி, போன்றவர்கள் வெற்றிபெற்ற வரலாறு உண்டு, 2008 பொதுத்தேர்தலுக்குப்பிறகு அத்தொகுதி எதிர்க்கட்சி வசமானாலும், இந்த முறை மீண்டும் ம இ கா வெற்றிக்கொள்ளும் தொகுதியாக அது மாறும் என்ற நம்பிக்கை உருவெடுத்துள்ளது.

அதற்கு காரணம் இந்த  முறை பாஸ் மூன்றாவது அணியாக களம் காணுவதாலே, ம இ  கா வின் வெற்றி பிரகாசமாகவே இருக்கும். கடந்த இரண்டு தவணைகளிலும் பாஸின் ஆதரவால் மலாய்வாக்குகளாலேதான் கெஅடிலானுக்கு வெற்றிக் கிடைத்து. இருப்பினும் இந்த முறை அத்தொகுதியை மீட்டெடுக்க பாஸ் முனைந்தாலும்,வெற்றி வாய்ப்பு குறைவே, அதனால் ம இ கா வின் வெற்றி உறுதியென்றாலும் அங்கு களம் காணுகின்ற வேட்பாளர் யார் ? இரண்டு முறை களத்தில் இறங்கிய  ம இ கா, தலைமைச்செயலாளர் டத்தோ சக்திவேலாக இருக்கலாம் என்று களநிலவரங்கள் தெரிவித்தாலும் அத்தொகுதி  ம இ கா தலைவராகயிருந்து வருகின்ற திரு கோபாலகிருஷ்ணனும்  போட்டியிட விருப்பங்கொண்டுள்ளதும் பரவலாக அறிந்த செய்தியாக இருப்பதும் கவனிக்கத்தக்கதுதான். இருப்பினும்  இருவருக்கும் மாற்றமாக புதிய முகமொன்கை ம இ கா தலைமைத்துவம் களத்தில் நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தெரிகிறது..

சுபாங் தொகுதி—

சிலாங்கூரில்  மற்றொரு தொகுதியான சுபாங் ,ம இ காவின் வெற்றிக்குரிய தொகுதியாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. டான்ஸ்ரீ மகாலிங்கம், டான்ஸ்ரீ நிஜார்   போன்றவர்கள் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதிதான் அது!

2008 தேர்தலுக்குப்பிறகு கெஅடிலான் பக்கம் அத்தொகுதி திசைமாறியது. டத்தோ முருகேசன், திரு. பிரகாஷ்ராவ் போன்றவர்கள் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினாலும், இந்த முறை மீண்டும் பிரகாஷ்ராவ் களம் காணவே பெருமளவு சாத்தியமுண்டு, இவர் இடையில் கட்சியில் ஏற்பட்ட உள்தகராற்றில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தவர்களில் ஒருவராகயிருந்தாலும், ம இ கா தேசியத்தலைவர் பகைவனுக்கும் அருள்வாய் நல்நெஞ்சே என்ற அடிப்படையில் ஒரு வாய்பை இவருக்கு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கோத்தாராஜா தொகுதி—

சிலாங்கூரிலுள்ள மற்றொரு தொகுதியான கோத்தாராஜாவை   மீண்டும் ம இ கா வெல்லக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. பாஸின் பலமான கோட்டையென்று கருதப்படுகின்ற அத்தொகுதியில்  பாஸிலிருந்து பிரிந்து சென்ற அமானா இந்த முறை கள இறங்குவதாலே ம இ காவுக்கான வெற்றிவாய்ப்பு கணிசமாக இருக்குமென்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன, டான்ஸ்ரீ விக்னேசுரன் 2003 தேர்தலில் வெற்றிக்கொண்ட அத்தொகுதியை, 2008ல் அவரே மீண்டும் பாஸிடம் அத்தொகுதியை  இழக்க வேண்டியதாயிற்று, 2013 ல் ம இ கா வின் வேட்பாளராக களமிறங்கிய டத்தோ முருகேசன் மீண்டும் பாஸிடம் தோல்வியைத் தழுவினார், அன்று இவரின் மோசமான தோல்விக்கு ம  இ கா வினர் நடத்திய உள்குத்து வேலையும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அத்தொகுதியில் ம இ கா வின் அண்டலாஸ் சட்டமன்றத்தொகுதியும் உள்ளடங்கியிருப்பதாலே கோத்தாராஜாவை வழக்கமான தொகுதியைப் போன்று கருதிடவும் முடியாது என்பதால்; ஒரு சமயம் ம இ கா மகளிர் தலைவியான மோகனா முனியாண்டி  களத்தில் இறக்கப்படலாம் என்று உரசலான  பேச்சு அடிப்பட்டாலும், அதையும் மீறி இன்னொரு புதிய வேட்பாளர் வேறொரு மாநிலத்திலிருந்து இறக்கப்பட சாத்தியம் இல்லையென்றும் சொல்லிவிட முடியாது என்றே களநிலவரம் தெரிவிக்கிறது.

  • தெலுங்கெமாங் தொகுதி

நெகிரி மாநிலத்திலுள்ள தெலுக்கெமாங் தொகுதியும் ம இ காவின் கோட்டையாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது, 1974 ல் ம இகாவின் உதவித்தலைவர்களில் ஒருவரான டத்தோ பத்மநாபன் போட்டியிட்டு

வெற்றி பெற்றதையெட்டி, அதன்பின்னர் டத்தோ மாரிமுத்து, டான்ஸ்ரீ மகாலிங்கம், அவருக்கடுத்து மறைந்த திரு. அன்பழகன், அதன் பின்னர் டத்தோ சோதிநாதன் உள்ளிட்டவர்கள் போட்டியிட்ட அத்தொகுதியை

–2008 ல் கெஅடிலான் தன் வசமாககியது. இந்த முறை அந்த தொகுதியை ம இ கா  வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. இப்போதுள்ள களநிலவரப்படி, டத்தோ சோதிநாதனுக்கு மீண்டுமொரு வாய்பை தேசியத்தலைவர் வழங்குவார் என்றே தெரிகிறது. இடையிலே ம இ கா வில் ஏற்பட்ட சில நெருக்கடிகளுக்கு இவர் ஒரு காரணமென்றாலும் இவரையும் பகைவனுக்கும் அருள்வாய் நஞ்நெஞ்சே என்ற அடிப்படையில் மன்னித்து கட்சியில் இணைத்தும் இணைந்தும் இருப்பதால், மும்முனை போட்டியால் ம இ கா இம்முறை அத்தொகுதியை வெற்றிக்கொள்ளும் என்றே தெரிகிறது.

எனவே ம இ கா தேசிய முன்னணி சின்னத்தில் நிறுத்தப்போகும் ஒன்பது நாடாளுமன்ற  வேட்பாளர்கள் நமது ஆருடப்படி மேற்கண்டவர்களாகவும் இருக்கலாம் அல்லது தலைமைத்துவ முடிவுப்படி சில மாற்றங்களோடு வேறு சிலராகவும் இருக்கலாம், எது எப்படியிருப்பினும் கட்சியின்  முடிவே இறுதியாகவும் உறுதியாகவும் இருக்கலாம் என்பதால் தேர்தல் களத்தைப் பொறுத்தே காயை நகர்த்த வேண்டியுள்ளது. அதனால் இந்த முறை ம இ காவின்  ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில்  கூடுமானவரை 9-9 என்றும் வெற்றி அமையலாம் அல்லது 9-7 என்றளவில் சற்று சரிவோடும் முடிவு அமையலாம் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

திசைகளுக்காக

உங்கள் சாணக்கியன்

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.