5 நாள் குழந்தையாக இருந்தபோது உயிர்ப் பிச்சை அளித்த டாக்டரை சென்னையில் சந்தித்த பிரிட்டன் இளம்பெண்

0
120
சென்னை:
அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளின் நகரை சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 1997-ம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையின் கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்ததால் உடனடியாக அதற்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அவ்வேளையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த பத்து வயது சிறுவனின் உடலுறுப்புகளை தானமாக வழங்க அவனது பெற்றோர் முன்வந்தனர்.
பிறந்து ஐந்தே நாளான அந்த பெண் குழந்தையின் விலா எலும்பை 4 அங்குல நீளம், 3 அங்குல அகலத்துக்கு (சீட்டுக்கட்டு அட்டைப் பெட்டியின் அளவுக்கு) வெட்டி, கெட்டுப்போன கல்லீரலை வெளியேற்றி மாற்று ஈரலை பொருத்தும் மிகவும் சிக்கலான 6 மணி நேர ஆபரேஷன் லண்டன் நகரில் உள்ள கிங்க்ஸ் ஹாஸ்பிட்டலில் வெற்றிகரமாக நடந்தேறியது.
இந்த ஆபரேஷனை செய்த மருத்துவ பேராசியர், டாக்டர் முஹம்மது ரேலா உலகில் முதன்முதலாக மிக சிறிய குழந்தைக்கு இந்த சிக்கலான ஆபரேஷனை செய்ததற்காக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் முஹம்மது ரேலா தற்போது சென்னையில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் கல்லீரல் நோய் ஆராய்ச்சி மற்றும் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவராகவும், இயக்குனராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் கருத்தரங்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பேசிய பழனிசாமி, ‘20 ஆண்டுகளுக்கு முன்பாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேபன்சுட்கே என்ற 5 நாள் பெண் குழந்தைக்கு லண்டனில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முகமது ரேலாவால் செய்யப்பட்டது. தற்போது மேடையின் முன்பு அனைவரின் முன் எந்த அளவிற்கு உடல் தகுதியோடு இருக்கிறார் என்பதை நம் கண்முன் பார்த்தோம். அவர் தற்போது சட்டம் பயின்று வருகிறார்’ என்று குறிப்பிட்டார்.
டாக்டர் முஹம்மது ரேலாவின் உலக சாதனை படைத்த அறுவை சிகிச்சையின்போது ஐந்துநாள் குழந்தையாக இருந்த பேபன்சுட்கே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு உயிர்ப் பிச்சை அளித்த டாக்டரை இன்று அவர் முதன்முறையாக சந்தித்த தருணம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here