50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராஜராஜ சோழன் சிலை தமிழகம் வந்தடைந்தது

0
171
சென்னை:
தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலின் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.) ஆகிய 2 சிலைகளும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் ராஜராஜ சோழன் சிலையும், ராணி லோகமாதேவி சிலையும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அவ்வப்போது ரகசியமாக பெரியகோவிலுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர்.
அப்போது சிலை குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. குஜராத்தில் உள்ள தாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு சரியான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்தனர்.
இதைத் தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை எடுத்து கொண்டு குஜராத் சென்று சிலைகள் உள்ள அருங்காட்சியகத்தில் அதை ஒப்படைத்தனர். அங்கு இருந்த 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது தெரிந்ததும், அருங்காட்சியக நிர்வாகம் ராஜராஜ சோழன் சிலையையும், லோகமாதேவி சிலையையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சிலைகள் அங்கிருந்து ரெயில் மூலம் இன்று சென்னை கொண்டுவரப்பட்டது. அமைச்சர பாண்டியராஜன் சிலைகளை வரவேற்றார். மேலும், ஐஜி பொன்மானிக்க வேலை அமைச்சர் பாராட்டினார்.
விரைவில் சிலைகள் தஞ்சைக்கு எடுத்துச் சென்று பெரிய கோவிலில் வைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.