பண்பட்ட கலைஞர் மலேசிய சந்திரபாபு காலமானார்

0
422

(எழுத்து எஸ்.பி.சரவணன்)

மலேசியத் தமிழ்க் கலை உலகின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான பாடகர் சின்னப்பன் இன்று காலமானார். ‘மலேசிய சந்திரபாபு’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர், சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

பாடத் தொடங்கிய காலம் முதல் அவரின் கடைசி மேடை நிகழ்ச்சி வரை பாடகர் சந்திரபாபுவின் பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார். மேடைகளில் அவர் பாடி ஆடிய காட்சியைப் பார்த்தவர்களின் கண்களுக்கு மட்டுமே அவரின் திறமை புரியும்.

பாடகர் சந்திரபாபுவின் குரல் இவருக்கு மிகவும் பொருந்தி போகவே, ‘மலேசிய சந்திரபாபு’ எனும் அடைப்பெயர் இவரோடு ஒட்டிக் கொண்டது. பாடகர் சந்திரபாபுவின் பாடல்களை இவரைத் தவிர வேறு யாராலும் பாடமுடியாது என்பதையும் இவர் பதிவு செய்தவர்.

ஒரு முறை பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டியில், தமது கடைசி மூச்சு இருக்கும் வரை பாடுவதையே தாம் விரும்புவதாக கூறியிருந்தார். அதே போல், கால்கள் வலுவிழந்த நிலையிலும் ஊன்றுகோலின் துணையுடன் மேடைகளில் பாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர், இளம் கலைஞர்களை சந்தித்தால், தமது கடந்த கால நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதில் தவறியதில்லை. அதேபோல் தமது நியமான கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்துவதிலும் அவர் தவறியதில்லை.

பண்பட்ட கலைஞராக வலம் வந்த இவர், இளமை காலத்தில் விளையாட்டுத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு காட்டிவந்தார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். சிறந்த கால்பந்து விளையாட்டாளராக இவர் திகழ்ந்தவர். அதேபோல் இளம் கால்ந்து வீரர்கள் பலரை உருவாக்கிய சிறந்த பயிற்றுநராகவும் திகழ்ந்தவர்.

சுங்கை பூலோ, புக்கிட் டாரா, துவான்மீ, கோல்ட்ஃபீல்ட் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து கால்பந்து குழுவை அமைத்து, அதனை சிறப்பாக வழி நடத்தியும் இருந்தார். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள், அன்றைய காலக் கட்டத்தில் மாநில அளவில் விளையாடியும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியக் கலைத்துறை, மேலும் ஒரு பண்பட்ட கலைஞரை இன்று இழந்தது. அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.