ஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு -ஜெயக்குமார்

0
89
சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஜாக்டோ – ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சார்பில் தங்கம் தென்னரசு  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என  தங்கம் தென்னரசு  பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
உயர்ந்து வரும் ஓய்வூதிய நிதிச்சுமையால் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர முடியவில்லை. வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டறிந்தே புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையிலேயே இருக்கிறோம் என்பது தெரிந்தே புதிய அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்தனர்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அழைத்தும் அவர்கள் பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர் சாலைமறியலில் ஈடுபட்டதால் 86 வழக்குகள்  பதியப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உடனடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட ஆயிரத்து 656 பேரும் பிணையில் விடுவிக்கபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here