இந்திய சமுதாய காற்பந்துத்துறையில்  மீண்டும் ஓர் அத்தியாயம்!

0
256

மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் அணி மிஃபா

சமுதாயத்தினர்கள் மகிழ்ச்சி பெருவெள்ளம்

 

இந்திய சமுதாய காற்பந்துத்துறையில் மிஃபா தனது வரலாற்று சுவடுகளை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் மலேசிய பிரிமியர் லீக்கில் சிறந்த அடைவு நிலையை பெற்று வந்த நமது அணி   மலேசிய கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்கும்  தகுதியினையும் அடைந்து சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமில்லாது மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் அணி  மிஃபா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சரித்திரத்திற்கு இந்திய சமுதாய பெருமக்கள் வாழ்த்துக்களையும் தங்களது மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தி யுள்ளனர்.

மலேசிய பிரிமியர் லீக்கில் யூ.கே.எம் அணியுடனான ஆட்டத்தில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றியை பதிவு செய்து மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கான தகுதியினை நமது அணி அடைந்தது. நமது அணியின் சார்பில் சீடி, ஷெர்மன்,  தினகரன் ஆகியோர் கோல்களை புகுத்தினர்.

நமது அணி 19 ஆட்டங்களை நிவர்த்தி செய்து 8 ஆட்டங்களில் வெற்றியும் 5 ஆட்டங்களில் சமநிலையும், 6 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு 29 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளது.

நமது அணிக்கு இன்னும் 1 ஆட்டம் எஞ்சியுள்ளது.

பிரிமியர் லீக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களை பெறும் அணிகள் மலேசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடும்  தகுதியினை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிஃபாவின் இந்த சரித்திர வெற்றி குறித்து அதன் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்களிடம் வினவிய போது அவர் கூறியதாவது  இந்த வரலாற்று சரித்திரத்திற்கு துணை நின்ற அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றியினை பறைசாற்றுவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக மிஃபாவின் தலைமைப் பயிற்றுநர் கே.தேவன், மேலாளர் துவான் ஏ.எஸ்.பி.ராஜன், மிஃபாவின் செயலாளர் அன்பானந்தன்,  மிஃபா நிர்வாகத்தினர்கள், விளையாட்டாளர்கள் நன்கொடையாளர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இவர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள நமது அணியின் அடைவு நிலை போற்றுதலுக்குரியது. அந்த வகையில்  நமது சமுதாய பெருமக்கள் நமது அணிக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டுமென அணியின் மேலாளர் துவான் ஏ.எஸ்.பி ராஜன்  கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர்  குறிப்பிடுகையில் சமுதாயத்தினர்கள் சிலர் மிஃபா மீது தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். அதிகமான பணம் கிடைக்கப் பெறுவதாகவும் நினைக்கின்றனர். உண்மையில் நமது அணி பல இடர்பாடுகளுக்கு மத்தியில் இந்த சரித்திரத்தை நிகழ்த்தி சமுதாயத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளது என அவர் கூறினார்.

நமது அணி நமது கடமை நமது வெற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here